கவிதை தொகுப்பு | காயா | தேன்மொழி தாஸ் கவிதைகள்

கவிதை தொகுப்பு : காயா
கவிஞர் : தேன்மொழி தாஸ்
பதிப்பகம் : மேகா Note that in some cases, the bus images displayed are representative. Please contact the respective bus stands and depots for the most up-to-date bus schedules.

காயா - தேன்மொழி தாஸ்

காயா – தேன்மொழி தாஸ்

காயா – தேன்மொழி தாஸ் கவிதைகள்

காயா மலர்கள்
முல்லை நிலத் தெய்வத்தின் சொற்கள்
அப்பூக்களின் நிறம் கடவுளின் தேகம்

இருளின் பேரகராதி இவள்தான்
பின் காயாதான் மூலவிதியானாள்
எனக்குள் காளியானாள்
மனக்கசப்பின் குறியீடானாள்
விதையின்றி தாயாகி விளைந்துகொண்டே இருக்கிறாள்.

எனது புன்னகை இளகாதிருக்கும் நாளில்
வெறுமை பற்றிச் சொல்ல
என் மொழி
ஆட்டுக்குட்டியின் அடிவயிற்றுக் கதறலாகும்.

வண்ணமேறி பிறந்த வரிக்குதிரைகளாய் அலையும் மேகங்கள்

பூமியின் அச்சு சுழலும்
புள்ளி யார் கண்ணிலும்
படாமல் இருப்பதைப்போல்
நமது காதல் மறைந்தே வாழட்டும்.

நீர்வாழ்த் தாவரங்களின் மோகம்தான்
நீரின் அதிர்வுகள்.

மலைப்பாதைகளில் தந்திரக்காரனின் விரல்களென
அசைகின்றன பெரணிச்செடிகள்..

இரண்டு கடல்
இரண்டு பிரபஞ்சம்
இரண்டு பித்தப் பை
கண்ணாடி ஸ்தானங்கள்
பார்வை கொண்ட கூழாங்கற்கள்
அலையும் ஓவிய ஞானங்கள்..
தட்டானின் கண்கள்.

வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்.

காட்டில்தான் நீலக்குறிஞ்சி பூக்கும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்.

எனது ஆன்மா
சிறிய வைரப் புறாவின் கண்

இருவாட்சிப் பறவையின் அலகு
இருள் உறையும் காட்டின் மரப்பொந்தில்
பறந்தொளிவது போல்
இன்றைக்கும் சூரியன் மறைகிறது.

சிறுத்தைக் குட்டிகள் தன் தாயின் உடலில் அசையும்
காட்டின் கம்பீரத்தை நிமிண்டுகின்றன.

முத்த நீராலும் மலைப் படுகையின் மண்ணாலும்
குழைத்துக் கட்டப்படும் இருவாட்சியின்
பொந்து மழைக்காட்டின் குறியீடு
இவ்விரவில் இதன் அலகின் மஞ்சள் சூரியனின் உட்கரு.

மயிலின் முன்கழுத்தென நீலமேறி
வளைந்து ஓடும் ஓடையென வெட்கம்

காட்டுப்புறாவின் மேனியில்
விளையும்
கந்தகப் பொன்பச்சை நிறத்தை
உருகுமென் கண்கள் அணிகின்றன.

எங்கிருந்தோ தழுவும் உனது விரல்கள்
மலையாத்தி பூவிதழ்களாய்
என் மேல் உதிர்கின்றன.

துரோகங்களினால்
துடைத்துக் காலிசெய்யப்பட்டிருந்த
ஆன்மாவின் பாத்திரத்தில்
ஒரு துளியாய் விழுகிறது
உனது அன்பு.

எனது மனம்
சிறுத்தையின் வாயில் அகப்பட்ட
கலைமானின் கழுத்தாய்.

எனது இரவுகள் சிலந்தியின் நெசவுகள்

காத்திருப்பில்
காட்டுத்திராட்சைச்செடி என்மேல் படர்ந்துவிட்டது.

தட்டான்களின் முட்டைகள்
மலைவெளியெங்கும் நீர்நிலைகளில்
அதன் பால்யத்தோடு பருவகாலங்களையும் பதுக்கிவிடுகின்றன
மரணத்தை விதைக்க இடம்தேடுவதே
அதன் பறத்தல்

அடிமைப்படுத்தப்பட்ட மக்களின்
அடுப்படிப் புலம்பல்கள்
விதைகளற்ற தாவரங்களின்
வருத்தங்களாய் வெறுமனே
வெளியைப் பிடித்து கதறி அசைகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*